2161
வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த

மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்

கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான

இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை

உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே   
2162
பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப்

புவிநடையில் பற்பலகால் போந்து போந்து
நென்மலையோ நிதிமலையோ என்று தேடி

நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி
மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று

வழுத்தியதே இல்லைஇந்த வஞ்ச நெஞ்சம்
கன்மலையோ இரும்போசெம் மரமோ பாறைக்

கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ   
2163
தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்

தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி

விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு

செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த

இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே   
2164
அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட

அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள்
கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே

கொள்ளுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டோ 
நெடியனே முதற்கடவுட் சமுகத் தோர்தம்

நெடும்பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை
ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல்

எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றே   
2165
கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில்

கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே
உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம்

ஒருதாய்போல் மாயைஇருள் ஓங்கும் போதின்
மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ

மதியிலேன் மாழாந்து மயங்க நீதான்
வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே

மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே