2166
நற்றாயும் பிழைகுறிக்கக் கண்டோ ம் இந்த

நானிலத்தே மற்றவர்யார் நாடார் வீணே
பற்றாயும் அவர்தமைநாம் பற்றோம் பற்றில்

பற்றாத பற்றுடையார் பற்றி உள்ளே
உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே

உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன்
பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்

பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே   
2167
எண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்

எம்பெருமான் என்றுமகிழ்ந் திறுமாந் திங்கே
நண்ணியமற் றையர்தம்மை உறாமை பேசி

நன்குமதி யாதிருந்த நாயி னேனைத்
தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத்

தாண்டவஞ்செய் கின்றபெருந் தகையே எங்கள்
புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில்

பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ   
2168
அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே

அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு
வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து

மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்
துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர்

துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்
இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ

என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே   
2169
புற்றோங்கும் அரவமெல்லாம் பணியாக் கொண்டு

பொன்மேனி தனில்அணிந்த பொருளே மாயை
உற்றோங்கு வஞ்சமனக் கள்வ னேனை

உளங்கொண்டு பணிகொள்வ துனக்கே ஒக்கும்
மற்றோங்கும் அவரெல்லாம் பெருமை வேண்டும்

வன்மனத்தர் எனைவேண்டார் வள்ள லேநான்
கற்றோங்கும் அறிவறியேன் பலவாச் சொல்லும்

கருத்தறியேன் எனக்கருளக் கருது வாயே   
2170
அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்

ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட

சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்

வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை

ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே