2191
அருளறி யாச்சிறு தேவருந் தம்மை அடுத்தவர்கட்
கிருளறி யாவிளக் கென்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
மருளறி யாப்பெருந் தேவேநின் தன்னடி வந்தடுத்தேன்
தெருளறி யாச்சிறி யேன்ஆயி னுஞ்செய்க சீரருளே   
2192
அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே   
2193
சரங்கார் முகந்தொடுத் தெய்வது போலென் றனையுலகத்
துரங்கா ரிருட்பெரு வாதனை யால்இடர் ஊட்டுநெஞ்சக்
குரங்கால் மெலிந்துநின் நாமந் துணையெனக் கூறுகின்றேன்
இரங்கார் தமக்கும் இரங்குகின் றோய்எற் கிரங்குகவே   
2194
கூறுற்ற குற்றமுந் தானே மகிழ்வில் குணமெனவே
ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள் வான்என்பர் ஆங்கதற்கு
வேறுற்ற தோர்கரி வேண்டுங்கொ லோஎன்னுள் மேவிஎன்றும்
வீறுற்ற பாதத் தவன்மிடற் றேகரி மேவியுமே   
2195
சூற்படு மேக நிறத்தோனும் நான்முகத் தோனும்என்னைப்
போற்படும் பாடுநல் லோர்சொலக் கேட்கும் பொழுதுமனம்
வேற்படும் புண்ணில் கலங்கிஅந் தோநம் விடையவன்பூங்
காற்படுந் தூளிநம் மேற்படு மோஒரு கால்என்னுமே