2196
வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த்
தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை
ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும்
நாளேநன் னாள்அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே   
2197
அடுத்தார் தமைஎன்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப்பிச்சை
எடுத்தா யினும்இடு வார்கள்என் பார்அதற் கேற்கச்சொற்பூத்
தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரி லேபிச்சைச் சோறெடுத்துக்
கொடுத்தாய்நின் பேரருள் என்சொல்லு கேன்எண் குணக்குன்றமே   
2198
நாடிநின் றேநினை நான்கேட்டுக் கொள்வது நண்ணும்பத்துக்
கோடியன் றேஒரு கோடியின் நூற்றொரு கூறுமன்றே
தேடிநின் றேபுதைப் போருந் தருவர்நின் சீர்நினைந்துட்
பாடியந் தோமனம் வாடிநின் றேன்முகம் பார்த்தருளே   
2199
தாயாகி னுஞ்சற்று நேரந் தரிப்பள்நந் தந்தையைநாம்
வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்திதுநீ
ஈயாய் எனில்அருள் வான்என் றுனையடுத் தேன்உமையாள்
நேயா மனமிரங் காயாஎன் எண்ணம் நெறிப்படவே   
2200
நடும்பாட்டை நாவலன் வாய்த்திருப் பாட்டை நயந்திட்டநீ
குடும்பாட்டை மேற்கொண்ட என்தமிழ்ப் பாட்டையும் கொண்டெனுள்ளத்
திடும்பாட்டை நீக்கிலை என்னினுந் துன்பத் திழுக்குற்றுநான்
படும்பாட்டை யாயினும் பார்த்திரங் காய்எம் பரஞ்சுடரே