2201
ஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப்
போட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக்
கேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே
நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே   
2202
சீர்க்கின்ற கூடலில் பாணனுக் காட்படச் சென்றஅந்நாள்
வேர்க்கின்ற வெம்மணல் என்தலை மேல்வைக்கு மெல்லடிக்குப்
பேர்க்கின்ற தோறும் உறுத்திய தோஎனப் பேசிஎண்ணிப்
பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன் உள்ளம் பதைக்கின்றதே   
2203
நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற
தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால்
நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள்
சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே   
2204
தெருளும் பொருளும்நின் சீரரு ளேஎனத் தேர்ந்தபின்யான்
மருளும் புவனத் தொருவரை யேனு மதித்ததுண்டோ 
வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
இருளும் கருமணி கண்டா அறிந்தும் இரங்கிலையே   
2205
பெண்ணான் மயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை
அண்ணாநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
கண்ணார் உலகில்என் துன்பமெல் லாம்வெளி காணிலிந்த
மண்ணா பிலத்தொடு விண்ணாடுங் கொள்ளை வழங்குமென்றே