2206
நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றஎன்னைக்
குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய்
முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய்
வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே   
2207
மதியாமல் ஆரையும் நான்இறு மாந்து மகிழ்கின்றதெம்
பதியாம் உனது திருவருட் சீருரம் பற்றியன்றோ
எதியார் படினும் இடர்ப்பட் டலையஇவ் வேழைக்கென்ன
விதியா இனிப்பட மாட்டேன் அருள்செய் விடையவனே   
2208
கற்கோட்டை நெஞ்சருந் தம்பால் அடுத்தவர் கட்குச்சும்மாச்
சொற்கோட்டை யாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்தடுத்தேன்
அற்கோட்டை நெஞ்சுடை யேனுக் கிரங்கிலை அன்றுலவா
நெற்கோட்டை ஈந்தவன் நீயல்லை யோமுக்கண் நின்மலனே   
2209
ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்
சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்
போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே   
2210
பிறைமுடித் தாண்டொரு பெண்முடித் தோர்பிள்ளைப் பேர்()முடித்த
நிறைமுடித் தாண்டவஞ் செவ்வேணி செய்திட நித்தமன்றின்
மறைமுடித் தாண்டவஞ் செய்வோய்என் பாலருள் வைத்தெளியேன்
குறைமுடித் தாண்டுகொள் என்னே பலமுறை கூறுவதே