2216
வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளைந்துகொண்ட
மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன்
ஊனம் விடாதுழல் நாயேன் பிழையை உளங்கொண்டிடேல்()
ஞானம் விடாத நடத்தோய்நின் தண்ணருள் நல்குகவே   
2217
நாயுஞ் செயாத நடையுடை யேனுக்கு நாணமும்உள்
நோயுஞ் செயாநின்ற வன்மிடி நீக்கிநன் நோன்பளித்தாய்
பேயுஞ் செயாத கொடுந்தவத் தால்பெற்ற பிள்ளைக்குநல்
தாயும் செயாள்இந்த நன்றிகண் டாய்செஞ் சடையவனே   
2218
உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்
தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப்
பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்
அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே   
2219
மானெழுந் தாடுங் கரத்தோய்நின் சாந்த மனத்தில்சினந்
தானெழந் தாலும் எழுகஎன் றேஎன் தளர்வைஎல்லாம்
ஊனெழுந் தார்க்கநின் பால்உரைப் பேன்அன்றி ஊர்க்குரைக்க
நானெழுந் தாலும்என் நாஎழு மோமொழி நல்கிடவே   
2220
வனமெழுந் தாடுஞ் சடையோய்நின் சித்த மகிழ்தலன்றிச்
சினமெழுந் தாலும் எழுகஎன் றேஎன் சிறுமையைநின்
முனமெழுந் தாற்றுவ தல்லால் பிறர்க்கு மொழிந்திடஎன்
மனமெழுந் தாலும்என் வாய்எழு மோஉள்ள வாறிதுவே