2221
சிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த
கற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம்
அற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே
நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே   
2222
வருஞ்செல்லுள்() நீர்மறுத் தாலும் கருணை மறாதஎங்கள்
பெருஞ்செல்வ மேஎஞ் சிவமே நினைத்தொழப் பெற்றும்இங்கே
தருஞ்செல் அரிக்கு மரம்போல் சிறுமைத் தளர்நடையால்
அருஞ்செல்லல் மூழ்கிநிற் கின்றேன் இதுநின் அருட்கழகே  
2223
கருமுக நீக்கிய பாணனுக் கேகன கங்கொடுக்கத்
திருமுகம் சேரற் களித்தோய்என் றுன்னைத் தெரிந்தடுத்தென்
ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலையேல்
உருமுக() வார்க்கும் விடையோய் எவர்மற் றுதவுவரே   
2224
மருப்பா வனத்துற்ற மாணிக்கு மன்னன் மனமறிந்தோர்
திருப்பா சுரஞ்செய்து பொற்கிழி ஈந்தநின் சீர்நினைந்தே
விருப்பா நினையடுத் தேன்எனக் கீந்திட வேஇன்றென்னை
கருப்பாநின் சித்தம் திருப்பாய்என் மீது கறைக்கண்டனே   
2225
பீழையை மேவும்இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ்
ஏழையை நீவிட லாமோ அடிமைக் கிரங்குகண்டாய்
மாழையைப்() போன்முன்னர்த் தாங்கொண்டு வைத்து வளர்த்தஇள
வாழையைத் தாம்பின்னர் நீர்விட லின்றி மறுப்பதுண்டே