2226
கருத்தறி யாச்சிறி யேன்படுந் துன்பக் கலக்கமெல்லாம்
உருத்தறி யாமை பொறுத்தருள் ஈபவர் உன்னையன்றித்
திருத்தறி யார்பிறர் அன்றேமென் கன்றின் சிறுமைஒன்றும்
எருத்தறி யாதுநற் சேதா அறியும் இரங்குகவே   
2227
வான்வேண்டிக் கொண்ட மருந்தோமுக் கண்கொண்ட வள்ளலுன்னை
நான்வேண்டிக் கொண்டது நின்னடி யார்க்கு நகைதருமீ
தேன்வேண்டிக் கொண்டனை என்பார் இதற்கின்னும் ஏனிரங்காய்
தான்வேண்டிக் கொண்ட அடிமைக்குக் கூழிடத் தாழ்ப்பதுண்டே  
2228
பையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் பாடுகின்றோர்
உய்யுரைத் தாவுள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே
பொய்யுரைத் தாலும் தருவார் பிறர்அது போலன்றிநான்
மெய்யுரைத் தாலும் இரங்காமை நின்னருள் மெய்க்கழகே  
2229
மடல்வற்றி னாலும் மணம்வற்று றாத மலரெனஎன்
உடல்வற்றி னாலும்என் உள்வற்று மோதுயர் உள்ளவெல்லாம்
அடல்வற்று றாதநின் தாட்கன்றி ஈங்கய லார்க்குரையேன்
கடல்வற்றி னாலும் கருணைவற் றாதமுக் கண்ணவனே  
2230
எள்ளிருக் கின்றதற் கேனுஞ் சிறிதிட மின்றிஎன்பான்
முள்ளிருக் கின்றது போலுற்ற துன்ப முயக்கமெல்லாம்
வெள்ளிருக் கின்றவர் தாமுங்கண் டார்எனில் மேவிஎன்றன்
உள்ளிருக் கின்றநின் தாட்கோதல் என்எம் உடையவனே