2231
பொன்கின்று() பூத்த சடையாய்இவ் வேழைக்குன் பொன்னருளாம்
நன்கின்று நீதரல் வேண்டும்அந் தோதுயர் நண்ணிஎன்னைத்
தின்கின்ற தேகொடும் பாம்பையும் பாலுணச் செய்துகொலார்
என்கின்ற ஞாலம் இழுக்குரை யாதெற் கிரங்கிடினே  
2232
வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம்
பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச்
சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டுந் திகழ்முலையைத்
தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே  
2233
கோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்ளித்
தேள்வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர்
வாள்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய்
ஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே  
2234
விடையிலை யோஅதன் மேலேறி என்முன் விரைந்துவரப்
படையிலை யோதுயர் எல்லாம் துணிக்கப் பதங்கொளருட்
கொடையிலை யோஎன் குறைதீர நல்கக் குலவும்என்தாய்
புடையிலை யோஎன் தனக்காகப் பேசஎம் புண்ணியனே  
2235
நறையுள தேமலர்க் கொன்றைகொண் டாடிய நற்சடைமேல்
பிறையுள தேகங்கைப் பெண்ணுள தேபிறங் குங்கழுத்தில்
கறையுள தேஅருள் எங்குள தேஇக் கடையவனேன்
குறையுள தேஎன் றரற்றவும் சற்றுங் குறித்திலதே