2236
சினத்தாலும் காமத்தி னாலும்என் தன்னைத் திகைப்பிக்கும்இம்
மனத்தால் உறுந்துயர் போதாமை என்று மதித்துச்சுற்றும்
இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி னாலும் இளைக்கவைத்தாய்
அனத்தான் புகழும் பதத்தோய் இதுநின் அருட்கழகே  
2237
புல்லள வாயினும் ஈயார்தம் வாயில் புகுந்துபுகழ்ச்
சொல்லள வாநின் றிரப்போர் இரக்கநற் சொன்னங்களைக்
கல்லள() வாத்தரு கின்றோர்தம் பாலுங் கருதிச்சென்றோர்
நெல்லள வாயினும் கேளேன்நின் பாலன்றி நின்மலனே  
2238
பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யேஎம் பெருஞ்செல்வமே
கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதற் கட்கரும்பே
மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி யேஎன் மனமுழுதும்
குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே  
2239
கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு
பெண்கட்டி யாள நினைக்கின்ற ஓர்சிறு பிள்ளையைப்போல்
எண்கட்டி யானுன் அருள்விழைந் தேன்சிவ னேஎன்நெஞ்சம்
புண்கட்டி யாய்அலைக் கின்றது மண்கட்டிப் போலுதிர்ந்தே  
2240
மெய்விட்ட வஞ்சக நெஞ்சால் படுந்துயர் வெந்நெருப்பில்
நெய்விட்ட வாறிந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத் தைய இப் பொய்யனைநீ
கைவிட் டிடநினை யேல்அருள் வாய்கரு ணைக்கடலே