2241
அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற
தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற
பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா
இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே  
2242
அண்டங்கண் டானும் அளந்தானும் காண்டற் கரியவநின்
கண்டங்கண் டார்க்குஞ் சடைமேல் குறைந்த கலைமதியின்
துண்டங்கண் டார்க்கும் பயமுள தோஎனச் சூழ்ந்தடைந்தேன்
தொண்டன்கண் டாள்பல தெண்டன்கண் டாய்நின் துணையடிக்கே  
2243
தேட்டக்கண் டேர்மொழிப் பாகா உலகில் சிலர்குரங்கை
ஆட்டக்கண் டேன்அன்றி அக்குரங் கால்அவர் ஆடச்சற்றும்
கேட்டுக்கண் டேனிலை நானேழை நெஞ்சக் கிழக்குரங்கால்
வேட்டுக்கொண் டாடுகின் றேன்இது சான்ற வியப்புடைத்தே  
2244
போகங்கொண் டார்த்த அருளார் அமுதப் புணர்முலையைப்
பாகங்கொண் டார்த்த பரம்பொரு ளேநின் பதநினையா
வேகங்கொண் டார்த்த மனத்தால்இவ் வேழை மெலிந்துமிகச்
சோகங்கொண் டார்த்துநிற் கின்றேன் அருளத் தொடங்குகவே   
2245
இன்றல வேநெடு நாளாக ஏழைக் கெதிர்த்ததுன்பம்
ஒன்றல வேபல எண்ணில வேஉற் றுரைத்ததயல்
மன்றல வேபிறர் நன்றல வேயென வந்தகயக்
கன்றல வேபசுங் கன்றடி யேன்றனைக் காத்தருளே