2246
படிபட்ட மாயையின் பாற்பட்ட சாலப் பரப்பிற்பட்டே
மிடிபட்ட வாழ்க்கையின் மேற்பட்ட துன்ப விசாரத்தினால்
அடிபட்ட நானுனக் காட்பட்டும் இன்னும் அலைதல்நன்றோ
பிடிபட்ட நேரிடைப் பெண்பட்ட பாகப் பெருந்தகையே  
2247
உடையாய்என் விண்ணப்பம் ஒன்றுண்டு கேட்டருள் உன்னடிச்சீர்
தடையாதும் இன்றிப் புகல்வதல் லால்இச் சகத்திடைநான்
நடையால் சிறுமைகொண் டந்தோ பிறரை நவின்றவர்பால்
அடையா மையுநெஞ் சுடையாமை யுந்தந் தருளுகவே  
2248
தஞ்சமென் றேநின்ற நாயேன் குறையைத் தவிர்உனக்கோர்
பஞ்சமின் றேஉல கெல்லாநின் சீரருட் பாங்குகண்டாய்
எஞ்சநின் றேற்குனை யல்லால் துணைபிறி தில்லைஇது
வஞ்சமன் றேநின் பதங்காண்க முக்கண் மணிச்சுடரே  
2249
பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ
ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் னுடையவன்நீ
வெறுத்தாலும் வேறிலை வேற்றோர் இடத்தை விரும்பிஎன்னை
அறுத்தாலுஞ் சென்றிட மாட்டேன் எனக்குன் அருளிடமே  
2250
சேல்வரும் ஏர்விழி மங்கைபங் காஎன் சிறுமைகண்டால்
மேல்வரு நீவரத் தாழ்த்தாலும் உன்றன் வியன்அருட்பொற்
கால்வரு மேஇளங் கன்றழத் தாய்ப்பசுக் காணின்மடிப்
பால்வரு மேமுலைப் பால்வரு மேபெற்ற பாவைக்குமே