2251
வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநின்
பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம்
துன்பட்ட வீரர்அந் தோவாத வூரர்தம் தூயநெஞ்சம்
என்பட்ட தோஇன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே  
2252
நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீணடையில்
சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல்
கூர்சிந்து புந்தியும் கொண்டுநின் றேன்உட் குறைசிந்தும்வா
றோர்சிந்து போலருள் நேர்சிந்தன் ஏத்தும் உடையவனே  
2253
கொடிகொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர்முகமும்
துடிகொண்ட கையும் பொடிகொண்ட மேனியும் தோலுடையும்
பிடிகொண்ட பாகமும் பேரருள் நோக்கமும் பெய்கழலும்
குடிகொண்ட நன்மனம் என்மனம் போற்குறை கொள்வதின்றே  
2254
விதிக்கும் பதிக்கும் பதிநதி ஆர்மதி வேணிப்பதி
திதிக்கும் பதிக்கும் பதிமேற் கதிக்குந் திகழ்பதிவான்
துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு மாபதி சொற்கடந்த
பதிக்கும் பதிசிற் பதியெம் பதிநம் பசுபதியே  
2255
எனையடைந் தாழ்த்திய துன்பச் சுமையை இறக்கெனவே
நினையடைந் தேன்அடி நாயேற் கருள நினைதிகண்டாய்
வினையடைந் தேமன வீறுடைந் தேநின்று வேற்றவர்தம்
மனையடைந் தேமனம் வாடல்உன் தொண்டர் மரபல்லவே