2256
வனம்போய் வருவது போலேவன் செல்வர் மனையிடத்தே
தினம்போய் வருமிச் சிறியேன் சிறுமைச் செயலதுபோய்ச்
சினம்போய்க் கொடும்பகைக் காமமும் போய்நின் திறநிகழ்த்தா
இனம்போய்க் கொடிய மனம்போய் இருப்பதென் றென்னரசே  
2257
பெற்றா ளனையநின் குற்றேவல் செய்து பிழைக்கறியாச்
சிற்றாள் பலரினும் சிற்றா ளெனுமென் சிறுமைதவிர்த்
துற்றாள் கிலைஎனின் மற்றார் துணைஎனக் குன்கமலப்
பொற்றாள் அருட்புகழ்க் கற்றாய்ந்து பாடப் புரிந்தருளே  
2258
அந்நாணை யாதுநஞ் சேற்றயன் மால்மனை யாதியர்தம்
பொன்னாணைக் காத்த அருட்கட லேபிறர் புன்மனைபோய்
இந்நாணை யாவகை என்னாணைக் காத்தருள் ஏழைக்குநின்
தன்னாணை ஐயநின் தாளாணை வேறு சரணில்லையே  
2259
பவசாத னம்பெறும் பாதகர் மேவும்இப் பாரிடைநல்
சிவசாத னத்தரை ஏன்படைத் தாய்அத் திருவிலிகள்
அவசாத னங்களைக் கண்டிவ ருள்ளம் அழுங்கஎன்றோ
கவசா தனமெனக் கைம்மா னுரியைக் களித்தவனே  
2260
நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே
ஊன்செய்த நாவைக்கொண் டோ தப்பெற் றேன்எனை ஒப்பவரார்
வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே