2266
மறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித் தாய்திசை மாமுகங்கொள்
இறைக்கொளித் தாய்இங் கதிலோர் பழியிலை என்றன்மனக்
குறைக்கொளித் தாலும் குறைதீர்த் தருளெனக் கூவிடும்என்
முறைக்கொளித் தாலும் அரசேநின் பால்பழி மூடிடுமே  
2267
முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட
பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல்
நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால்
பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே  
2268
நீளா தரவுகொண் டென்குறை யாவும் நிகழ்த்தவும்நீ
கேளா தவன்என வாளா இருக்கின்ற கேண்மைஎன்னோ
சூளாத முக்கண் மணியே விடேல்உனைச் சூழ்ந்தஎன்னை
ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்தினுமே  
2269
வளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற
இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ
உளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய்
களங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே  
2270
காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே
சோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர்
தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும்
சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே