2271
அந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம்
சிந்தோத நீரில் சுழியோ இளையவர் செங்கைதொட்ட
பந்தோ சிறுவர்தம் பம்பர மோகொட்டும் பஞ்சுகொலோ
வந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே  
2272
பொன்வச மோபெண்க ளின்வச மோகடற் பூவசமோ
மின்வச மோஎனும் மெய்வச மோஎன் விதிவசமோ
தன்வச மோமலந் தன்வச மோஎன் சவலைநெஞ்சம்
என்வச மோஇல்லை நின்வசம் நான்எனை ஏன்றுகொள்ளே  
2273
நானடங் காதொரு நாட்செயும் குற்ற நடக்கைஎல்லாம்
வானடங் காதிந்த மண்ணடங் காது மதிக்குமண்டம்
தானடங் காதெங்குந் தானடங் காதெனத் தானறிந்தும்
மானடங் காட்டு மணிஎனை ஆண்டது மாவியப்பே  
2274
பாம்பா யினும்உணப் பால்கொடுப் பார்வளர்ப் பார்மனைப்பால்
வேம்பாயி னும்வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக்கடாத்
ஹ தாம்பா யினும்() ஒரு தாம்பாயி னுங்கொடு தாம்பின்செல்வார்
தேம்பாய் மலர்க்குழற் காம்பாக என்னையும் சேர்த்துக்கொள்ளே  
2275
நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட உப்பையும் நேடிச்செல்வோர்
பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு வாழைப் பழமுங்கொள்ளத்
தெருப்புக்கு வாரொடு சேர்கிலென் னாம்இச் சிறுநடையாம்
இருப்புக்கு வேண்டிய நான்சிவ யோகர்பின் எய்திலென்னே