2281
ஓயாக் கருணை முகிலே நுதற்கண் ஒருவநின்பால்
தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை நான்சுடு சொல்லைச்சொல்லி
வாயால் சுடினுந் தெரிந்தில தேஇனி வல்வடவைத்
தீயால் சுடினுமென் அந்தோ சிறிதுந் தெரிவதன்றே  
2282
மாலறி யான்மல ரோன்அறி யான்மக வான்அறியான்
காலறி யான்மற்றை வானோர் கனவினுங் கண்டறியார்
சேலறி யாவிழி மங்கைபங் காநின் திறத்தைமறை
நாலறி யாஎனில் நானறி வேன்எனல் நாணுடைத்தே   
2283
ஆறிட்ட வேணியும் ஆட்டிட்ட பாதமும் அம்மைஒரு
கூறிட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலமிக்க
நீறிட்ட மேனியும் நான்காணும் நாள்என் னிலைத்தலைமேல்
ஏறிட்ட கைகள்கண் டாணவப் பேய்கள் இறங்கிடுமே  
2284
அல்லுண்ட கண்டத் தரசேநின் சீர்த்தி அமுதமுண்டோ ர்
கொல்லுண்ட தேவர்தங் கோளுண்ட சீரெனும் கூழுண்பரோ
சொல்லுண்ட() வாயினர் புல்லுண்ப ரோஇன் சுவைக்கண்டெனும்
கல்லுண்ட பேர்கருங் கல்லுண்ப ரோஇக் கடலிடத்தே  
2285
காரே எனுமணி கண்டத்தி னான்பொற் கழலையன்றி
யாரே துணைநமக் கேழைநெஞ் சேஇங் கிருந்துகழு
நீரே எனினுந் தரற்கஞ்சு வாரொடு நீயுஞ்சென்று
சேரேல் இறுகச் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே