2286
வலைப்பட்ட மானென வாட்பட்ட கண்ணியர் மையலென்னும்
புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான்மதி போய்ப்புலம்ப
விலைப்பட்ட இம்மனம் அந்தோஇவ் வேழைக்கென் றெங்கிருந்து
தலைப்பட்ட தோஇதற் கென்செய்கு வேன்முக்கட் சங்கரனே  
2287
குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே
வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ
பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய்
திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே  
2288
பெண்மணி பாகப் பெருமணி யேஅருட் பெற்றிகொண்ட
விண்மணி யான விழிமணி யேஎன் விருப்புறுநல்
கண்மணி நேர்கட வுண்மணி யேஒரு கால்மணியைத்
திண்மணிக் கூடலில் விற்றோங்கு தெய்வ சிகாமணியே  
2289
அலையெழுத் துந்தெறும் ஐந்தெழுத் தாலுன்னைஅர்ச்சிக்கின்றோர்
கலையெழுத் தும்புகழ் காலெழுத் திற்குக் கனிவிரக்கம்
இலையெழுத் தும்பிறப் பீடெழுத் துங்கொண்ட எங்கள்புழுத்
தலையெழுத் துஞ்சரி யாமோ நுதற்கண் தனிமுதலே  
2290
ஆட்சிகண் டார்க்குற்ற துன்பத்தைத் தான்கொண் டருளளிக்கும்
மாட்சிகண் டாய்எந்தை வள்ளற் குணமென்பர் மற்றதற்குக்
காட்சிகண் டேனிலை ஆயினும் உன்னருட் கண்டத்திலோர்
சாட்சிகண் டேன்களி கொண்டேன் கருணைத் தடங்கடலே