2296
ஊர்தரு வார்நல்ல ஊண்தரு வார்உடை யுந்தருவார்
பார்தரு வார்உழற் கேர்தரு வார்பொன் பணந்தருவார்
சோர்தரு வார்உள் ளறிவுகெ டாமல் சுகிப்பதற்கிங்
கார்தரு வார்அம்மை யார்தரு பாகனை யன்றிநெஞ்சே  
2297
பண்செய்த சொன்மங்கை பாகாவெண் பாற்கடல் பள்ளிகொண்டோ ன்
திண்செய்த சக்கரங் கொள்வான் அருச்சனை செய்திட்டநாள்
விண்செய்த நின்னருட் சேவடி மேற்பட வேண்டியவன்
கண்செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே  
2298
மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண்
காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக்
கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூடஇல்லாள்
பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே  
2299
என்மேற் பிழையிலை யானென்செய் கேன்என் இடத்திருந்தென்
சொன்மேற் கொளாதெனை இன்மேல் துரும்பெனச் சுற்றுநெஞ்சத்
தின்மேற் பிழையது புன்மேற் பனியெனச் செய்தொழிக்க
நின்மேற் பரம்விடை தன்மேற்கொண் டன்பர்முன் நிற்பவனே  
2300
மைவிட்டி டாமணி கண்டாநின் தன்னை வழுத்தும்என்னை
நெய்விட்டி டாஉண்டி போல்இன்பி லான்மெய்ந் நெறியறியான்
பொய்விட்டி டான்வெம் புலைவிட்டி டான்மயல் போகமெலாம்
கைவிட்டி டான்எனக் கைவிட்டி டேல்வந்து காத்தருளே