2306
தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டுவரும்
ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும்விட்ட
நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள்
ஆக்கமும் நின்பதத் தன்பும் தருக அருட்சிவமே  
2307
பொய்வந்த வாயும் புலைவந்த செய்கையும் புன்மையெல்லாம்
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனிநற் கனிவுடன்யான்
மெய்வந்த வாயும் விதிவந்த செய்கையும் வீறன்பினால்
தைவந்த நெஞ்சமும் காண்பதென் றோசெஞ் சடைக்கனியே  
2308
கங்கைகொண் டாய்மலர் வேணியி லேஅருட் கண்ணிமலை
மங்கைகொண் டாய்இடப் பாகத்தி லேஐய மற்றுமொரு
நங்கைகொண் டால்எங்கு கொண்டருள் வாயென்று நண்ணுமன்பர்
சங்கைகொண் டால்அதற் கென்சொல்லு வாய்முக்கட் சங்கரனே  
2309
வாட்கொண்ட கண்ணியர் மாயா விகார வலைபிழைத்துன்
தாட்கொண்ட நீழலில் சார்ந்திடு மாறென் றனக்கருள்வாய்
கீட்கொண்ட கோவணப் பேரழ காஎனைக் கேதமற
ஆட்கொண்ட நீஇன்று வாளா இருப்ப தழகல்லவே  
2310
வீட்டுத் தலைவநின் தாள்வணங் கார்தம் விரிதலைசும்
மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை
ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை பாம்பின் அடுந்தலைகற்
பூட்டுத் தலைவெம் புலைத்தலை நாற்றப் புழுத்தலையே