2311
தெண்ணீர் முடியனைக் காணார்தங் கண்இருள் சேர்குருட்டுக்
கண்ணீர் சொரிந்தகண் காசக்கண் புன்முலைக் கண்நகக்கண்
புண்ணீர் ஒழுகுங் கொடுங்கண் பொறாமைக்கண் புன்கண்வன்கண்
மண்ணீர்மை யுற்றகண் மாமணி நீத்தகண் மாலைக்கண்ணே  
2312
கண்ணுத லான்புகழ் கேளார் செவிபொய்க் கதைஒலியும்
அண்ணுற மாதரு மைந்தருங் கூடி அழுமொலியும்
துண்ணெனுந் தீச்சொல் ஒலியும்அவ் வந்தகன் தூதர்கண்மொத்
துண்ணுற வாவென் றுரப்பொலி யும்புகும் ஊன்செவியே  
2313
மணிகொண்ட கண்டனை வாழ்த்தார்தம் வாய்த்தெரு மண்ணுண்டவாய்
பிணிகொண்ட வாய்விடப் பிச்சுண்ட வாய்வரும் பேச்சற்றவாய்
துணிகொண்ட வாயனற் சூடுண்ட வாய்மலஞ் சோர்ந்திழிவாய்
குணிகொண்ட உப்பிலிக் கூழுண்ட வாய்எனக் கூறுபவே  
2314
சகமிலை யேஎன் றுடையானை எண்ணலர் தங்கள்நெஞ்சம்
சுகமிலை யேஉணச் சோறிலை யேகட்டத் தூசிலையே
அகமிலை யேபொரு ளாவிலை யேவள்ள லாரிலையே
இகமிலை யேஒன்றும் இங்கிலை யேஎன் றிரங்குநெஞ்சே  
2315
பொங்கரும் பேர்முலை மங்கைக் கிடந்தந்த புத்தமுதே
செங்கரும் பேநறுந் தேனே மதுரச் செழுங்கனியே
திங்களுங் கங்கையுஞ் சேர்ந்தொளிர் வேணிச் சிவக்கொழுந்தே
எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே