2316
வில்லைப்பொன் னாக்கரங் கொண்டோ ய்வன்தொண்டர் விரும்புறச்செங்
கல்லைப்பொன் னாக்கிக் கொடுத்தோய்நின் பாதங் கருத்தில்வையார்
புல்லைப்பொன் னாக்கொளும் புல்லர்கள் பாற்சென்று பொன்னளிக்க
வல்லைப்பொன் னார்புய என்பார் இஃதென்சொல் வாணர்களே  
2317
கூத்துடை யாய்என் னுடையாய்முத் தேவரும் கூறுகின்ற
ஏத்துடை யாய்அன்பர் ஏத்துடை யாய்என்றன் எண்மைமொழிச்
சாத்துடை யாய்நின் தனக்கே பரம்எனைத் தாங்குதற்கோர்
வேத்துடை யார்மற் றிலைஅருள் ஈதென்றன் விண்ணப்பமே  
2318
வெப்பிலை யேஎனும் தண்விளக் கேமுக்கண் வித்தகநின்
ஒப்பிலை யேஎனும் சீர்புக லார்புற்கை உண்ணுதற்கோர்
உப்பிலை யேபொரு ளொன்றிலை யேஎன் றுளல்பவர்மேல் 
தப்பிலை யேஅவர் புன்தலை ஏட்டில் தவமிலையே  
2319
எனைப்பெற்ற தாயினும் அன்புடை யாய்எனக் கின்பநல்கும்
உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச் சேவடிக் கோங்கும்அன்பு
தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற மேலவர் சார்பைப்பெற்றால்
வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம் போல மெவிவதின்றே  
2320
நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல்
குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே
பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ்
உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே