2321
துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே  
2322
ஒருமுடி மேல்பிறை வைத்தோய் அரிஅயன் ஒண்மறைதம்
பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற
மருமுடி யூரன் முடிமேல் மறுப்பவும் வந்ததவர்
திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் திருவடிக்கே  
2323
வேல்கொண்ட கையுமுந் நூல்கொண்ட மார்பமும் மென்மலர்ப்பொற்
கால்கொண்ட ஒண்கழற் காட்சியும் பன்னிரு கண்ணும்விடை
மேல்கொண்ட செஞ்சுடர் மேனியும் சண்முக வீறுங்கண்டு
மால்கொண்ட நெஞ்சம் மகிழ்வதெந் நாள்என்கண் மாமணியே  
2324
விண்பூத்த கங்கையும் மின்பூத்த வேணியும் மென்முகமும்
கண்பூத்த நெற்றியும் பெண்பூத்த பாகமும் கார்மிடறும்
தண்பூத்த பாதமும் பொன்பூத்த மேனியும் சார்ந்துகண்டே
மண்பூத்த வாழ்க்கையை விண்பூத்த பூவின் மதிப்பதென்றே  
2325
தண்மதி யோஅதன் தண்ணமு தோஎனச் சார்ந்திருணீத்
துண்மதி யோர்க்கின் புதவுநின் பேரருள் உற்றிடவே
எண்மதி யோடிச்சை எய்தா தலையுமென் ஏழைமதி
பெண்மதி யோஅன்றிப் பேய்மதி யோஎன்ன பேசுவதே