2326
பிட்டுக்கும் வந்துமுன் மண்சுமந் தாயென்பர் பித்தனென்ற
திட்டுக்கும் சீரருள் செய்தளித் தாயென்பர் தீவிறகுக்
கட்டுக்கும் பொன்முடி காட்டிநின் றாயென்பர் கண்டிடஎன்
மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென் கோமுக்கண் மாணிக்கமே  
2327
மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட வாழ்வின் மதிமயங்கிக்
கையிட்ட நானும்உன் மெய்யிட்ட சீரருள் காண்குவனோ
பையிட்ட பாம்பணி யையிட்ட மேனியும் பத்தருள்ள
மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட வேலுங்கொள் முன்னவனே  
2328
தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண்
அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ 
உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம்
சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே  
2329
மட்டுண்ட கொன்றைச் சடையர சேஅன்று வந்தியிட்ட
பிட்டுண்ட பிச்சைப் பெருந்தகை யேகொடும் பெண்மயலால்
கட்டுண்ட நான்சுகப் பட்டுண்டு வாழ்வன்இக் கன்மனமாம்
திட்டுண்ட பேய்த்தலை வெட்டுண்ட நாளில்என் தீமையற்றே  
2330
ஆட்டுக்குக் காலெடுத் தாய்நினைப் பாடலர் ஆங்கியற்றும்
பாட்டுக்குப் பேரென்கொல் பண்ணென்கொல் நீட்டியப் பாட்டெழுதும்
ஏட்டுக்கு மையென்கொல் சேற்றில் உறங்க இறங்குங்கடா
மாட்டுக்கு வீடென்கொல் பஞ்சணை என்கொல் மதித்திடினே