2331
ஒப்பற்ற முக்கட் சுடரேநின் சீர்த்தி உறாதவெறும்
துப்பற்ற பாட்டில் சுவையுள தோஅதைச் சூழ்ந்துகற்றுச்
செப்பற்ற வாய்க்குத் திருவுள தோசிறி தேனும்உண்டேல்
உப்பற்ற புன்கறி உண்டோ ர்தந் நாவுக் குவப்புளதே  
2332
சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் சீர்த்தியைச் சேர்த்தியந்த
நால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச்சற்றே
கால்வரும் ஆயினும் இன்புரு வாகிக் கனிமனம்அப்
பால்வரு மோஅதன் பாற்பெண் களைவிட்டுப் பார்க்கினுமே  
2333
கார்முக மாகப்பொற் கல்வளைத் தோய்இக் கடையவனேன்
சோர்முக மாகநின் சீர்முகம் பார்த்துத் துவளுகின்றேன்
போர்முக மாகநின் றோரையும் காத்தநின் பொன்னருள்இப்
பார்முக மாகஎன் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே  
2334
வான்வளர்த் தாய்இந்த மண்வளர்த் தாய்எங்கும் மன்னுயிர்கள்
தான்வளர்த் தாய்நின் தகைஅறி யாஎன் றனைஅரசே
ஏன்வளர்த் தாய்கொடும் பாம்பையெல் லாந்தள் ளிலைவளர்த்தாய்
மான்வளர்த் தாய்கரத் தார்நினைப் போல வளர்ப்பவரே  
2335
அற்கண்டம் ஓங்கும் அரசேநின் றன்அடி யார்மதுரச்
சொற்கண்ட போதும்என் புற்கண்ட நெஞ்சம் துணிந்துநில்லா
திற்கண்ட மெய்த்தவர் போலோடு கின்ற தெறிந்ததுதீங்
கற்கண் டெனினும்அக் கற்கண்ட காக்கைநிற் காதென்பரே