2336
சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய்
வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம்
புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய்
மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே  
2337
சீரிடு வார்பொருட் செல்வர்க்க லாமல்இத் தீனர்கட்கிங்
காரிடு வார்பிச்சை ஆயினும் பிச்சன் அசடன்என்றே
பேரிடு வார்வம்புப் பேச்சிடு வார்இந்தப் பெற்றிகண்டும்
போரிடு வார்நினைப் போற்றார்என் னேமுக்கட் புண்ணியனே  
2338
சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான்
மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வௌ;விடய
மாலுக்கு வாங்கி வழங்கவுந் தான்சம் மதித்ததுகாண்
பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந் தோழன்என் பார்இதுவே  
2339
இணையேதும் இன்றிய தேவே கனல்இனன் இந்தெனுமுக்()
கணையே கொளும்செங் கரும்பே பிறவிக் கடல்கடத்தும்
புணையே திருவருட் பூரண மேமெய்ப் புலமளிக்கும்
துணையேஎன் துன்பந் துடைத்தாண்டு கொள்ளத் துணிந்தருளே  
2340
நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல்
புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல்
கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி
முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே