2341
விடநாகப் பூணணி மேலோய்என் நெஞ்சம் விரிதல்விட்டென்
உடனாக மெய்அன்பு ளூற்றாக நின்னரு ளுற்றிடுதற்
கிடனாக மெய்ந்நெறிக் கீடாகச் செய்குவ திங்குனக்கே
கடனாக நிற்பது கண்டேன்பின் துன்பொன்றுங் கண்டிலனே  
2342
நயப்படும் ஓர்நின் அருளெனக் கின்றெனில் நாய்மனமென்
வயப்படு மோதுயர் மண்படு மோநல்ல வாழ்வைஎன்னால்
செயப்படு மோகுணம் சீர்ப்படு மோபவம் சேரச்சற்றும்
பயப்படு மோமலம் பாழ்படு மோஎம் பசுபதியே  
2343
சோபங்கண் டார்க்கருள் செய்வோய் மதிக்கன்றிச் சூழ்ந்திடுவெந்
தீபங்கண் டாலும் இருள்போம்இவ் வேழை தியங்கும்பரி
தாபங்கண் டாய்அருள் செய்யாதென் குற்றந் தனைக்குறித்துக்
கோபங்கண் டாலுநன் றையாஎன் துன்பக் கொதிப்பறுமே  
2344
எல்லா முடைய இறையவ னேநினை ஏத்துகின்ற
நல்லார் தமக்கொரு நாளேனும் பூசை நயந்தியற்றிச்
சொல்லால் அவர்புகழ் சொல்லாதிவ் வண்ணம் துயர்வதற்கென்
கல்லாமை ஒன்றுமற் றில்லாமை ஒன்றிரு காரணமே  
2345
பிறையாறு கொண்டசெவ் வேணிப் பிரான்பதப் பேறடைவான்
மறையாறு காட்டுநின் தண்ணரு ளேயன்றி மாயைஎன்னும்
நிறையாறு சூழுந் துரும்பாய்ச் சுழலும்என் நெஞ்சினுள்ள
குறையாறு தற்கிடம் வேறில்லை காண்இக் குவலையத்தே