2346
மாலறி யாதவன் அன்றேஅத் தெய்வ வரதனுநின்
காலறி யாதவன் என்றால்அக் காலைஎக் காலைஎமைப்
போலறி யாதவர் காண்பார்முற் கண்டமெய்ப் புண்ணியர்தம்
பாலறி யாதவன் நானிது கேட்டுணர் பாலனன்றே  
2347
ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே  
2348
தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு
வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே
ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப்
பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே  
2349
வண்டுகொண் டார்நறுங் கொன்றையி னான்றன் மலரடிக்குத்
தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலிற்றள்ளும்
பெண்டுகொண் டார்தம் துயருக்கும் ஒப்பின்று பேசில்என்றே
கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின் உள்ளக் கருத்தெதுவே  
2350
மலங்கவிழ்ந் தார்மனம் வான்கவிழ்ந் தாலும்அவ் வான்புறமாம்
சலங்கவிழ்ந் தாலும் சலியாதென் புன்மனந் தான்கடலில்
கலங்கவிழ்ந் தார்மனம் போலே சலிப்பது காண்குடும்ப
விலங்கவிழ்ந் தாலன்றி நில்லாதென் செய்வல் விடையவனே