2351
மைகொடுத் தார்நெடுங் கண்மலை மானுக்கு வாய்ந்தொருபால்
மெய்கொடுத் தாய்தவர் விட்டவெம் மானுக்கு மேவுறஓர்
கைகொடுத் தாய்மயல் கண்ணியில் வீழ்ந்துட் கலங்குறும்என்
கொய்கொடுத் தாழ்மன மானுக்குக் காலைக் கொடுத்தருளே  
2352
உடம்பார் உறுமயிர்க் கால்புழை தோறனல் ஊட்டிவெய்ய
விடம்பாச் சியஇருப் பூசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும்இத்
தடம்பார் சிறுநடைத் துன்பஞ்செய் வேதனைத் தாங்கரிதென்
கடம்பாநற் பன்னிரு கண்ணா இனிஎனைக் காத்தருளே  
2353
மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற
பெண்ணாலும் நொந்துவந் தாரை எலாம்அருட் பேறெனுமுக்
கண்ணாலும் பார்த்தைந்து கையாலும் ஈயும் கணபதிநின்
பண்ணாலும் மாமறை மேற்றாளை என்னுட் பதித்தருளே  
2354
வானாள மாலயன் வாழ்வாள அன்றிஇம் மண்முழுதும்
தானாள நின்பதம் தாழ்பவர் தாழ்கஒண் சங்கையங்கை
மானாள மெய்யிடந் தந்தோய்துன் பற்ற மனமதொன்றே
நானாள எண்ணிநின் தாளேத்து கின்றனன் நல்குகவே  
2355
ஈடறி யாதமுக் கண்ணாநின் அன்பர் இயல்பினைஇந்
நாடறி யாதுன் அருளன்றி ஊண்சுவை நாவையன்றி
மேடறி யாதுநற் பாட்டைக்கற் றோரன்றி மேற்சுமந்த
ஏடறி யாதவை யேனறி யாஎன் றிகழ்வரன்றே