2356
சூடுண்ட பூஞைக்குச் சோறுண்ட வாய்பின் துடிப்பதன்றி
ஊடுண்ட பாலிட்ட ஊண்கண்ட தேனும் உணத்துணியா
தீடுண்ட என்மனம் அந்தோ துயரில் இடியுண்டும்இவ்
வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்ட தால்எம் விடையவனே  
2357
கரங்காட்டி மையிட்ட கண்காட்டி என்பெருங் கன்மநெஞ்சக்
குரங்காட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டுகல்லார்
உரங்காட்டிக் கோலொன் றுடனீட்டிக் காட்டி உரப்பிஒரு
மரங்காட் டியகுரங் காட்டுகின் றோரென் மணிகண்டனே  
2358
களங்கனி போல்மணி கண்டாநின் பொற்கழல் காணற்கென்சிற்
றுளங்கனி யாதுநின் சீர்கேட் கினும்அன் புறஉருகா
வளங்கனி காமஞ் சிறவாமல் சிற்றில் வகுத்துழலும்
இளங்கனி போல்நின்ற தென்செய்கு வேன்எம் இறையவனே  
2359
மாமத்தி னால்சுழல் வெண்தயிர் போன்று மடந்தையர்தம்
காமத்தி னால்சுழல் என்றன்நெஞ் சோஉன்றன் காலைஅன்பாம்
தாமத்தி னால்தளை யிட்டநெஞ் சோஇத் தகைஇரண்டின்
நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கெது நல்லநெஞ்சே  
2360
ஏற்றிலிட் டார்கொடி கொண்டோ ய் விளக்கினை ஏற்றபெருங்
காற்றிலிட் டாலும் இடலாம்நெல் மாவைக் கலித்திடுநீர்
ஆற்றிலிட் டாலும் பெறலாம்உட் காலை அடுங்குடும்பச்
சேற்றிலிட் டால்பின் பரிதாம் எவர்க்கும் திருப்புவதே