2361
தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச்
சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்
பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே   
2362
வேதனை யாமது சூதனை யாஎன்று வேதனையால்
போதனை யாநின் றுனைக்கூவு மேழையைப் போதனைகேள்
வாதனை யாதிங்கு வாதனை யாவென்றுன் வாய்மலரச்
சோதனை யாயினுஞ் சோதனை யாசிற் சுகப்பொருளே  
2363
இன்பற்ற இச்சிறு வாழ்க்கையி லேவெயி லேறவெம்பும்
என்பற்ற புன்புழுப் போல்தளர் ஏழை எனினுமிவன்
அன்பற்ற பாவிஎன் றந்தோ எனைவிடில் ஐயவையத்
தென்பற்ற தாகமற் றில்லைகண் டாய்எனை ஏன்றுகொள்ளே  
2364
களங்கொண்ட ஓர்மணிக் காட்சியும் முச்சுடர்க் கண்அருளும்
வளங்கொண்ட தெய்வத் திருமுக மாட்சியும் வாய்ந்தபரி
மளங்கொண்ட கொன்றைச் சடையும்பொற் சேவடி மாண்பும்ஒன்ற
உளங்கொண்ட புண்ணியர் அன்றோஎன் தன்னை உடையவரே   
2365
காவிக்கு நேர்மணி கண்டாவண் டார்குழல் கற்பருளும்
தேவிக்கு வாமங் கொடுத்தோய்நின் மாமலர்ச் சேவடிப்பால்
சேவிக்கும் சேவகஞ் செய்வோரை ஆயினுஞ் சேவிக்கஇப்
பாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு நீண்ட பயனதுவே