2366
கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண்
பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின்
இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச்
சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே  
2367
வெம்பெரு மானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங்கருணை
எம்பெரு மானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்பிடியார்
தம்பெரு மானுக்கும் சார்மலை மானுக்கும் சாற்றுமைங்கைச்
செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும் நான்பணி செய்யச்செய்யே  
2368
சாற்றவ னேகநன் னாவுள்ள தாயினும் சாற்றரிதாம்
வீற்றவ னேவெள்ளி வெற்பவ னேஅருள் மேவியவெண்
நீற்றவ னேநின் னருள்தர வேண்டும் நெடுமுடிவெள்
ஏற்றவ னேபலி ஏற்றவனே அன்பர்க் கேற்றவனே  
2369
பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம்
திதியே சரணம் சிவமே சரணம் சிவமுணர்ந்தோர்
கதியே சரணம்என் கண்ணே சரணம்முக் கட்கருணா
நிதியே சரணம் சரணம்என் பால்மெய்ந் நிலையருளே  
2370
என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே
என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே
என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே
என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே