2371
கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே
மான்போல் குதித்துக்கொண் டோ டேல் அமுத மதிவிளங்கும்
வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே   
2372
வேதனென் கோதற வேண்டுமென் கோஎன விண்ணப்பஞ்செய்
பாதனென் கோகடற் பள்ளிகொண் டான்தொழும் பண்பன்என்கோ
நாதனென் கோபர நாதனென் கோஎங்கள் நம்பிக்குநல்
தூதனென் கோஅவன் தோழனென் கோநினைத் து஦ய்மணியே    
2373
இயங்கா மனமும் கயங்கா நிலையும் இகபரத்தே
மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்தருள்வாய்
வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர் வாழ்த்துகின்ற
புயங்கா துதித்தற் குயங்கா தவருட் புகுந்தவனே   
2374
சிவசங்க ராசிவ யோகா சிவகதிச் சீரளிக்கும்
சிவசம்பு வேசிவ லோகா சிவாநந்தச் செல்வநல்கும்
சிவசுந்த ராசிவ போகா சிவாகமச் செந்நெறிசொல்
சிவபுங்க வாசிவ ஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே   
2375
மதிதத்து வாந்த அருட்சிவ மேசின் மயசிவமே
துதிசித் தெலாம்வல்ல மெய்ச்சிவ மேசிற் சுகசிவமே
கதிநித்த சுத்தச் சிவமே விளங்குமுக் கட்சிவமே
பதிசச்சி தாநந்த சிற்சிவ மேஎம் பரசிவமே