2376
கடும்புல வேடர்கள் ஓரைவர் இந்தியக் கள்வரைவர்
கொடுங்கர ணத்துட்டர் நால்வர்கள் வன்மலக் கோளரைவர்
அடும்படை கோடிகொண் டுற்றார்மற் றேழையன் யானொருவன்
இடும்படை யாதுமி லேன்வெல்வ தெங்ஙன் இறையவனே    
2377
இடைக்கொடி வாமத் திறைவாமெய்ஞ் ஞானிகட் கின்பநல்கும்
விடைக்கொடி ஏந்தும் வலத்தாய்நின் நாமம் வியந்துரையார்
கடைக்கொடி போலக் கதறுகின் றார்பொய்க் கதையவர்தாம்
புடைக்கொடி யாலன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே   
2378
உருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக்
கருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும்
தருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ
மருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே   
2379
என்னிறை வாஇமை யோரிறை வாமறை யின்முடிபின்
முன்னிறை வாமலை மின்னிறை வாமலர் முண்டகத்தோன்
தன்னிறை வாதிதித் தானிறை வாமெய்த் தபோதனருள்
மன்னிறை வாஇங்கு வாஎன் றெனக்குநல் வாழ்வருளே   
2380
போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே
போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே
போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே
போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே