2381
கஞ்சத்தி லேர்முக மஞ்சத்தி லேர்நடைக் கன்னியர்கண்
நஞ்சத்தி லேஅவர் வஞ்சத்தி லேபட்டு நாணுறும்புன்
நெஞ்சத்தி லேஅதன் தஞ்சத்தி லேமுக் கணித்தஎன்போல்
பஞ்சத்தி லேபிர பஞ்சத்தி லேஉழப் பார்எவரே   
2382
நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும்
வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின்
தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும்
ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே   
2383
இருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர்
கருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங்
கொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ
வெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே   
2384
ஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும்
பண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான்
எண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய்
கண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே   
2385
தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் தாங்கிஅந்தோ
இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண் டாய்சிறி தேஇறகு
முளைக்கின்ற போதறுப் பார்போல்நின் னாம மொழிந்திடுங்கால்
வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக் கண்ணுடை மாமணியே