2386
மஞ்சடை வான நிறத்தோன் அயன்முதல் வானவர்க்கா
நஞ்சடை யாள மிடுமிடற் றோய்கங்கை நண்ணுகின்ற
செஞ்சடை யாய்நின் திருப்பெய ராகச் சிறந்தஎழுத்
தஞ்சடை யார்கண்கள் பஞ்சடை யாமுன் னறிவிலரே   
2387
இலங்கா புரத்தன் இராக்கதர் மன்னன் இராவணன்முன்
மலங்காநின் வெள்ளி மலைக்கீ ழிருந்து வருந்தநின்சீர்
கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த
நலங்காணின் தன்மைஇன் றென்னள வியாண்டையின் நண்ணியதே   
2388
உடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந்
நடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங் காணிதி னான்சிறியேன்
புடையென்று வெய்ய லுறும்புழுப் போன்று புழுங்குகின்றேன்
விடையென்று மாலறங் கொண்டோ யென் துன்பம் விலக்குகவே   
2389
அருள்அர சேஅருட் குன்றேமன் றாடும் அருளிறையே
அருள்அமு தேஅருட் பேறே நிறைந்த அருட்கடலே
அருள்அணி யேஅருட் கண்ணேவிண் ணோங்கும் அருள்ஒளியே
அருள்அற மேஅருட் பண்பேமுக் கண்கொள் அருட்சிவமே   
2390
நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே
தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய்
அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே
விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே