2391
மெய்யகத் தேகணப் போதும் விடாது விரும்புகின்றோர்
கையகத் தேநின் றொளிர்கனி யேநுதற் கட்கரும்பே
வையகத் தேநினை அல்லாமல் நற்றுணை மற்றிலைஇப்
பொய்யகத் தேன்செயும் தீங்கா யிரமும் பொறுத்தருளே   
2392
முலைக்கலங் கார மிடுமட வார்மயல் மூடிஅவர்
தலைக்கலங் கார மலர்சூடு வார்நின் றனைவழுத்தார்
இலைக்கலங் காரவ் வியமன்வந் தாலென் இசைப்பர்வெள்ளி
மலைக்கலங் கார மணியேமுக் கண்கொண்ட மாமருந்தே   
2393
புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில்
திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச்
சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெணுந் தோறுநெஞ்சம்
எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே   
2394
மனக்கேத மாற்று மருந்தே பொதுஒளிர் மாணிக்கமே
கனக்கே துறஎன் கருத்தறி யாமல் கழறுகின்ற
தனக்கேளர் பாற்சென் றடியேன் இதயம் தளர்வதெல்லாம்
நினக்கே தெரிந்த தெனக்கே அருள நினைந்தருளே   
2395
மோகங் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றுமற்றுத்
தேகங் கலந்த பவந்தீர்க்கும் நின்பதம் சிந்திக்கும்நாள்
போகங் கலந்த திருநாள் மலையற் புதப்பசுந்தேன்
பாகங் கலந்தசெம் பாலே நுதற்கட் பரஞ்சுடரே