2396
கோலொன்று கண்ட இறைமகன் வாழ்வினும் கோடிபங்கு
மேலொன்று கண்டனம் நெஞ்சேஎன் சொல்லை விரும்பினியஞ்
சேலொன்று கண்ட மணியான் வரைப்பசுந் தேன்கலந்த
பாலொன்று கண்டகண் கொண்டுயர் வாழ்வு பலித்ததுவே   
2397
புலையள வோஎனும் நெஞ்சக னேன்துயர்ப் போகமெட்டு
மலையள வோஇந்த மண்ணள வோவந்த வானளவோ
அலையள வோவன்று மன்றுணின் றோங்கும் அருமருந்தே
இலையள வோஎனுந் தேவே அறிந்தும் இரங்கிலையே   
2398
கல்லென்று வல்லென்று மின்னார் புளகக் கனதனத்தைச்
சொல்லென்று சொல்லுமுன் சொல்லுமந் தோநின் துணையடிக்கண்
நில்லென்று பல்ல நிகழ்த்தினும் என்மனம் நிற்பதன்றே
அல்லென்று வெல்களங் கொண்டோ ய்என் செய்வ தறிந்திலனே   
2399
கள்ளா டியகொன்றைச் செஞ்சடை யோய்நற் கனகமன்றின்
உள்ளா டியமலர்ச் சேவடி யோய்இவ் வுலகியற்கண்
எள்ளா டியசெக் கிடைப்படல் போல்துன் பிடைஇளைத்துத்
தள்ளா டியநடை கொண்டேற்கு நன்னடை தந்தருளே   
2400
மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால்
இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே
செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால்
ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே