2406
ஆர்ப்பார் கடல்நஞ் சமுதுசெய் தாய்நின் அடிக்கன்பின்றி
வேர்ப்பார் தமக்கும் விருந்தளித் தாய்வெள்ளி வெற்பெடுத்த
கார்ப்பாள னுக்கும் கருணைசெய் தாய்கடை யேன்துயரும்
தீர்ப்பாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே  
2407
நானே நினக்குப் பணிசெயல் வேண்டும்நின் நாண்மலர்த்தாள்
தானே எனக்குத் துணைசெயல் வேண்டும் தயாநிதியே
கோனே கரும்பின் சுவையேசெம் பாலொடு கூட்டுநறுந்
தேனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே  
2408
மருவார் குழலியர் மையல் கடல்விழும் வஞ்சநெஞ்சால்
வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்குகண்டாய்
உருவாய் அருவும் ஒளியும் வெளியும்என் றோதநின்ற
திருவார் வயித்திய நாதா அமரர் சிகாமணியே  
2409
தவநேய மாகும்நின் தாள்நேய மின்றித் தடமுலையார்
அவநேய மேற்கொண் டலைகின்ற பேதைக் கருள்புரிவாய்
நவநேய மாகி மனவாக் கிறந்த நடுஒளியாம்
சிவனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே  
2410
ஐவாய் அரவில் துயில்கின்ற மாலும் அயனும்தங்கள்
கைவாய் புதைத்துப் பணிகேட்க மேவும்முக் கண்அரசே
பொய்வாய் விடாஇப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்நீ
செய்வாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே