2411
புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற
கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்
அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்
செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே  
2412
ஆர்த்தார் கடல்நஞ் சமுதுசெய் தாய்என்னை அன்பர்கள்பால்
சேர்த்தாய்என் துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திருஅருட்கண்
பார்த்தாய் பரம குருவாகி என்னுள் பரிந்தமர்ந்த
தீர்த்தா வயித்திய நாதா அமரர் சிகாமணியே  
2413
அறத்தாயை ஓர்புடை கொண்டோ ர் புடைமண் அளந்தமுகில்
நிறத்தாயை வைத்துல கெல்லாம் நடத்தும் நிருத்தஅண்டப்
புறத்தாய்என் துன்பம் துடைத்தாண்டு மெய்அருட் போதந்தந்த
திறத்தாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே  
2414
அலைஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்தம்
நிலைஓர் சிறிதும் அறியேன் எனக்குன் நிமலஅருள்
மலைஓங்கு வாழ்க்கையும் வாய்க்குங் கொலோபொன் மலைஎன்கின்ற
சிலையோய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே  
2415
ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால்
நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதஎன்றே
வான்கொண்ட நின்அருட் சீரேத்து கின்ற வகைஅறியேன்
தேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே