2421
கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம் கனிந்தகனி யாச்செய்யலாம்

கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங் கரடிபுலி சிங்கமுதலா
வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி வித்தையும் கற்பிக்கலாம்

மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை மேவுதேர் வடமாக்கலாம்
இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம் ஈகின்ற பெண்கள்குறியே

எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில் எத்துணையும் அரிதரிதுகாண்
வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே  
2422
படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம் பழுத்தபழ மோபூசுணைப்

பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது பாழாகு கின்றார்களோர்
பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு பெண்ணைஎனி னுங்கொள்கிலார்

பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும் பித்தேற்ற தோஅறிகிலேன்
செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம் தெரிந்திடக் காட்டிநகைதான்

செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல் செம்மாப்பர் அவர்வாய்மதம்
மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ள 

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே  
2423
பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது பிடிக்கஅறி யாதுசிலர்தாம்

பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம் பெறவே விரும்பிவீணில்
பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம் பசைஅற்று மேல்எழும்பப்

பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன பாவம்இவர் உண்மைஅறியார்
கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங் காட்டிச் சிரித்துநீண்ட

கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக் கயவர்வாய் மதமுழுதுமே
மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே  
2424
திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில் தியங்குவீர் அழியாச்சுகம்

சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி சேரவா ருங்கள்என்றால்
இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும் இடம்வேண்டும் இவைகள் எல்லாம்

இல்லையா யினும்இரவு பகல்என்ப தறியாமல் இறுகப்பி டித்தணைக்கப்
பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய பெண்ணகப் படுமாகிலோ

பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும் பிறகிதோ வருவம்என்பார்
வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரி அன்பர்பவ ரோகமறஈ ௅ே௷ந௅௲ ா஢ூி஡ா஧௉  
2425
பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண் பேச்சிவை எலாம்வேதனாம்

பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய பெரும்புரட் டாகும்அல்லால்
ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல் ஒருசிறிதும் இல்லைஇல்லை

உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும்
மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர் விரைமலர்த் தொடைஆதியா

வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு விளையாடு வீர்கள்என்பார்
வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே