2431
அருள்வடி வான மருந்து - நம்முள்

அற்புத மாக அமர்ந்த மருந்து
இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்

கின்புரு வாக இருந்த மருந்து நல்ல  
2432
சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந்

தானோதா னாகித் தழைக்கும் மருந்து
அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி

தானந்த மாக அமர்ந்த மருந்து நல்ல  
2433
வித்தக மான மருந்து - சதுர்

வேத முடிவில் விளங்கு மருந்து
தத்துவா தீத மருந்து - என்னைத்

தானாக்கிக் கொண்ட தயாள மருந்து நல்ல   
2434
பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும்

பேசப் படாத பெரிய மருந்து
இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்

என்று மதுரித் தினிக்கு மருந்து நல்ல   
2435
நானது வாகு மருந்து - பர

ஞான வெளியில் நடிக்கு மருந்து
மோந வடிவா மருந்து - சீவன்

முத்த ருளத்தே முடிக்கு மருந்து நல்ல