2436
புத்தமு தாகு மருந்து - பார்த்த

போதே பிணிகளைப் போக்கு மருந்து
பத்த ரருந்து மருந்து - அநு

பானமுந் தானாம் பரம மருந்து நல்ல  
2437
மாலயன் தேடு மருந்து - முன்ன

மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து
காலனைச் சாய்த்த மருந்து - தேவர்

காணுங் கனவினுங் காணா மருந்து நல்ல  
2438
தற்பர யோக மருந்து - உப

சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து
சிற்பர யோக மருந்து - உயர்

தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து நல்ல  
2439
அம்பலத் தாடு மருந்து - பர

மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து
எம்பல மாகு மருந்து - வேளூர்

என்னுந் தலத்தி லிருக்கு மருந்து நல்ல  
2440
சேதப்ப டாத மருந்து - உண்டால்

தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
பேதப்ப டாத மருந்து - மலைப்

பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து நல்ல