2441
ஆர்க்கு மரிதா மருந்து - தானே

ஆதி யநாதியு மான மருந்து
சேர்க்கும் புநித மருந்து - தன்னைத்

தேடுவோர் தங்களை நாடு மருந்து நல்ல  
2442
புண்ணியர்க் கான மருந்து - பரி

பூரண மாகப் பொருந்து மருந்து
எண்ணிய வின்ப மருந்து - எம

தெண்ணமெல் லாமுடித் திட்ட மருந்து நல்ல  
2443
பால்வண்ண மாகு மருந்து - அதில்

பச்சை நிறமும் படர்ந்த மருந்து
நூல்வண்ண நாடு மருந்து - உள்ளே

நோக்குகின் றோர்களை நோக்கு மருந்து நல்ல  
2444
பார்க்கப் பசிபோ மருந்து - தன்னைப்

பாராத வர்களைச் சேரா மருந்து
கூர்க்கத் தெரிந்த மருந்து - அநு

கூல மருந்தென்று கொண்ட மருந்து நல்ல  
2445
கோதிலா தோங்கு மருந்து - அன்பர்

கொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து
மாதொரு பாக மருந்து - என்னை

வாழ்வித்த என்கண் மணியா மருந்து நல்ல