2446
ஏக வுருவா மருந்து - மிக்க

ஏழைக ளுக்கும் இரங்கு மருந்து
சோகந் தவிர்க்கு மருந்து - பரஞ்

சோதியென் றன்பர் துதிக்கு மருந்து நல்ல  
2447
கோமளங் கூடு மருந்து - நலங்

கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து
நாமள வாத மருந்து - நம்மை

நாமறி யும்படி நண்ணு மருந்து நல்ல   
2448
செல்வந் தழைக்கு மருந்து - என்றுந்

தீரா வினையெலாந் தீர்த்த மருந்து
நல்வந் தனைகொள் மருந்து - பர

நாதாந்த வீட்டினுள் நண்ணு மருந்து நல்ல  
2449
வாய்பிடி யாத மருந்து - மத

வாதமும் பித்தமு மாய்க்கு மருந்து
நோய்பொடி யாக்கு மருந்து - அன்பர்

நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து நல்ல  
2450
பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்

பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து
மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்

வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து நல்ல