2461
இரங்கா திருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்தமனக்
குரங்கால் அலைப்புண் டலைகின்ற கொடிய பாவி இவன்என்றே
உரங்கா தலித்தோர் சிரிப்பார்நான் உலகத் துயரம் நடிக்கின்ற
அரங்காக் கிடப்பேன் என்செய்வேன் ஆரூர் அமர்ந்த அருமணியே  
2462
மணியார் கண்டத் தெண்டோ ள்செவ் வண்ணப் பவள மாமலையே
அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன்
தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே  
2463
தெரியத் தெரியும் தெரிவுடையார் சிவாநு பவத்தில் சிறக்கின்றார்
பிரியப் பிரியும் பெரும்பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
துரியப் பொருளே அணிஆரூர்ச் சோதி மணிநீ துயெஅருள்
புரியப் பெறுவேன் எனில்அவர்போல் யானும் சுகத்திற் பொலிவேனே  
2464
பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதா னந்தக் கடல்ஆடி
மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணிநீ வழங்காயேல்
மெலிவேன் துன்பக் கடல்மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல்
நலிவேன் அந்தோ அந்தோநின் நல்ல கருணைக் கழகன்றே  
2465
கருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய
அருணக் கமல மலரடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல்
வருணக் கொலைமா பாதகனாம் மறையோன் தனக்கு மகிழ்ந்தன்று
தருணக் கருணை அளித்தபுகழ் என்னாம் இந்நாள் சாற்றுகவே