2476
தவள நிறத்துத் திருநீறு தாங்கு மணித்தோள் தாணுவைநம்
குவளை விழித்தாய் ஒருபுறத்தே குலவ விளங்கும் குருமணியைக்
கவள மதமா கரியுரிவைக் களித்த மேனிக் கற்பகத்தைப்
பவள மலையைப் பழமலையிற் பரவி ஏத்திக் கண்டேனே  
2477
இளைத்த இடத்தில் உதவிஅன்பர் இடத்தே இருந்த ஏமவைப்பை
வளைத்த மதின்மூன் றெரித்தருளை வளர்த்த கருணை வாரிதியைத்
திளைத்த யோகர் உளத்தோங்கித் திகழுந் துரியா தீதமட்டுங்
கிளைத்த மலையைப் பழமலையிற் கிளர்ந்து வயங்கக் கண்டேனே  
2478
மடந்தை மலையாண் மனமகிழ மருவும் பதியைப் பசுபதியை
அடர்ந்த வினையின் தொடக்கைஅறுத் தருளும் அரசை அலைகடன்மேல்
கிடந்த பச்சைப் பெருமலைக்குக் கேடில் அருள்தந் தகம்புறமும்
கடந்த மலையைப் பழமலைமேற் கண்கள் களிக்கக் கண்டேனே  
2479
துனியும் பிறவித் தொடுவழக்குஞ் சோர்ந்து விடவுந் துரியவெளிக்
கினியும் பருக்குங் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும்
பனியுந் திமய மலைப்பச்சைப் படர்ந்த பவளப் பருப்பதத்தைக்
கனியுஞ் சிலையுங் கலந்தஇடம்() எங்கே அங்கே கண்டேனே  
2480
கருணைக் கடலை அக்கடலிற் கலந்த அமுதை அவ்வமுதத்
தருணச் சுவையை அச்சுவையிற் சார்ந்த பயனைத் தனிச்சுகத்தை
வருணப் பவளப் பெருமலையை மலையிற் பச்சை மருந்தொருபால்
பொருணச் சுறவே பழமலையிற் பொருந்தி யோங்கக் கண்டேனே