2521
உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே
கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை
வெள்ளம்உண் டிரவுபகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும்
விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச்சுரனே  
2522
நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே நான்என அறிந்துநான் தானாம்
பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப் பேதையேன் பிடிப்பதெந் நாளோ
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
வேதமும் தாங்கும் பாதனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே  
2523
சச்சிதானந்த வடிவம்நம் வடிவம் தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி
அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல்
மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே  
2524
ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட
நன்றல நன்றல் லாதல விந்து நாதமும் அலஇவை அனைத்தும்
பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட பூரண மாம்சிவம் ஒன்றே
வென்றல்என் றறிநீ என்றனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே  
2525
சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்
சுத்தசற் குணத்தௌ; ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே