2531
நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடிவழுத்திக்
களிநலன் உடன் இவ்வுலகெலாம்படைக்கக்கடைக்கணித்ததைஉளம்மறவேன்
அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே
வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே  
2532
சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும் செய்தருள் இறைமைதந் தருளில்
பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன்
ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மைஎற் கருளிய அரசே
வார்உருத் திடுபூண் மணிமுகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே  ,  
2533
விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே
கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
தண்அருட் கடலே அருட்சிவ போக சாரமே சராசர நிறைவே
வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே  
2534
நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே
வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே  
2535
கும்பமா முனியின் கரகநீர் கவிழ்த்துக் குளிர்மலர் நந்தனம் காத்துச்
செம்பொன்நாட் டிறைவற் கருளிய நினது திருவருட் பெருமையை மறவேன்
நம்பனார்க் கினிய அருள்மகப் பேறே நற்குணத் தோர்பெரு வாழ்வே
வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல் வல்லபைக் கணேசமா மணியே